நீண்டகால முதலீட்டில் அதிக லாபம் பெறுவதற்கான வழிகள்

நீண்ட கால முதலீடு என்கிறபோது, நம் கையில் இருக்கக்கூடிய மிகப் பெரிய பலம், கால அவகாசம்.

முதலீடு பெருகுவதற்கு நம்முடைய முதலீட்டின் அளவைவிட கால அவகாசம் அதிகம் என்பதை நாம் உணரவேண்டும்.

மாதாமாதம் ரூ.1,500 வீதம் தொடர்ந்து 30 வருடங்களுக்கு முதலீடு செய்துவந்தால், ஆண்டுக்குச் சராசரியாக 15% வருமானம் கிடைத்தால், முதலீட்டுத் தொகையான ரூ.5.4 லட்சம் என்பது ரூ.1 கோடிக்கு மேல் பெருகியிருக்கும்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போமா?

மாத எஸ்.ஐ.பி முதலீடு ரூ.1,500

முதலீட்டுக் காலம் 30 ஆண்டுகள்

மொத்த முதலீடு ரூ.5,40,000

எதிர்பார்க்கும் வருமானம் 15%

முதலீட்டுப் பெருக்கம் ரூ.1,05,14,731

நீண்ட கால முதலீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த முதலீட்டின் தன்மை, அது எவ்வாறு கடந்த காலங்களில் செயல்பட்டது, வரும் காலங்களில் நன்றாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு முதலியவற்றை அறிந்து தேர்வு
செய்யவேண்டும்.

சிறிய தொகையையும் முதலீடு செய்யலாம்

பலரும் நினைக்கக்கூடிய ஒரு விஷயம், நம்மால் சிறிய தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அவ்வாறு செய்வது எப்படி பெரிதாக வளரும் என்று நினைத்து முதலீட்டைச் செய்யாமலே விட்டுவிடுகிறார்கள். ஒருவர் மாதாமாதம் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், தற்போது கிடைக்கும் தொகை ரூ.71,64,339. இந்த லாபத்தைத் தங்கத்திலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

எது உச்சம்?

தற்போது, பங்குச் சந்தை உச்சத்தில் உள்ளது. ‘இப்போது முதலீடு செய்யலாமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாமா?’ என்று கேட்கின்றனர். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்,
ஜனவரி 8, 2008-ல் 20,873 புள்ளிகள்; இன்று 33,000 புள்ளிகள். கடந்த 10 வருடங்களில் 50% உயர்ந்துள்ளது. அப்போது அது உச்சம் என்று நினைத்து, அதில் முதலீடு செய்யாமல் போயிருந்தால், நம் முதலீடு 50% வளரும் வாய்ப்பை நாம் இழந்திருப்போம். எனவே, நீண்ட கால முதலீடு செய்பவர்கள் உச்சமா, குறைவா என்பதைப் பார்க்காமல் இருப்பது நல்லது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் முதலீட்டில் பொறுமை மிக அவசியம். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சக் கூடாது. பங்குச் சந்தை ஒரே சீராகச் செல்லாது. அது, கடல் அலையைப் போன்று கடற்கரையில் ஆர்ப்பரிக்கும்; உள்ளே சென்றால் மிக அமைதியாக இருக்கும்.

நம் முதலீடு, முதல் சில வருடங்களில் அதிகமாக ஏறியிறங்கி காணப்படும். நீண்ட கால அடிப்படையில் அது நம்மைப் பாதிக்காது.

இளம் வயதில் முதலீட்டைத் தொடங்குதல்

இளம் வயதில் முதலீட்டைத் தொடங்க வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்து நடைமுறைப்படுத்தியவர்கள், அவர்களின் ஐம்பதாவது வயதில் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கிற அளவுக்குப் பணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.

இன்னும் காலம் இருக்கிறதே என்று தாமதித்தவர்கள், ஐம்பது வயதில் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருப்பார்கள்.

இளமையில் சிறிய அளவில் தொகையைச் சேர்க்க ஆரம்பித்தாலே போதும், நீண்ட காலத்தில் அது நல்ல தொகுப்பு நிதியை (Corpus) உருவாக்கும்.

நீண்ட கால முதலீட்டுக்குப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள்

நீண்ட கால முதலீட்டுக்கு முழுவதுமாக பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களை நாடுவதே அதிக லாபத்துக்கான வழி. தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றுடன் பங்குச் சந்தை முதலீட்டை ஒப்பிட்டால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் நிச்சயம் அதிகமாக இருக்கும் என்பதே கடந்த கால வரலாறு.

ஆனால், நாமோ பாதுகாப்பான முதலீடு என்று நினைத்துத் தங்கத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் மட்டுமே முதலீடு செய்து வருகிறோம். நமது இந்த அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்வது

சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை, நமது முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்து நிறுத்திவிடுவது சரியானதல்ல. சிறிய தொகையாக இருந்தாலும், அதைத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலமே நம்மால் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

தேவைப்படும்போது பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வது

எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தால், நமக்குத் தேவைப்படும்போது அதிலுள்ள பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்கிற மாதிரி இருக்கும்?

உதாரணமாக, ரியல் எஸ்டேட் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், ஓர் இடத்தை ஒரு சில நாள்களில் நாம் நினைத்த தொகைக்கு விற்றுவிட முடியாது. அதற்குச் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் நமக்குத் தேவைப்படும் பணம், தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.Leave a Reply